Friday, January 30, 2009

2005 ஊடகவியலாளர்களுக்கு பேயாண்டு? 2006?



என்.சரவணன்
அதிகாரக் கைப்பற்றலுக்கும், ஆதிக்க சித்தாந்தங்களை பரப்புவதற்கும், புனைவுகளை நம்பச்செய்வதற்கும் ஆதிக்க சக்திகள் ஊடகங்களை ஒரு விலைமதிக்கமுடியாத ஆயுதமா­கவே கையாண்டுவருகிறார்கள் என்பதை இன்று உலகே அறியும்.

இதற்காகத் தான் நெப்போலியன் அப்போதே சொன்னான் -மக்களின் மனவுறுதியும், மக்கள் தொடர்பும் போரின் அரைவாசி பகுதி-.

ஆதிக்க சக்திகளுடன் மோதும் எந்த அடக்கப்படும் சக்தியும் முதலில் ஊடகப் போரை எதிர்கொண்டு தற்காப்பு நிலையெடுப்பதும், ஊடகத்தை ஒரு முக்கிய போர்க்கருவியாகவே பாவிப்பதும் தவிர்க்க இயலாததாகிறது.

ஊடகப்போரின் போது செய்திகளை திரித்து பிரச்சாரப்படுத்துவது, மற்றும் திரிபுபடுத்தப்பட்ட செய்தியினைக்கொண்டு பிழையான கருத்தாக்கங்களை நிறுவுவதும் போரின் தந்திரோபாயமாக எதிரி பாவிப்பது உண்மைதான். ஆனால் இன்னொரு விடுதலைக்காக போரிடும் அடக்கப்படும் சக்திகளும் அதையே ஒரு போர்த்தந்திரோபாயமாக கொள்ளும் போது அடிப்படை அரசியலே பிழையாகிவிடுகின்ற வரலாறு காலாகாலமாக நடந்து வந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இதற்குப் பஞ்சமில்லை என்பது தான் துரதிருஸ்டவசமான உண்மை.

இலங்கை நிலை

இந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 3ஆம் திகதி வரையான நாட்களில் நடக்கவிருக்கும் சர்வதேச பத்திரிகையாளர் தினம் இலங்கையில் ஐ.நாவினால் கொண்டாடப்படவிருக்கிறது. சர்வதேச ஊடகவியலாளர்கள் பலரும் கருத்தரங்குகள், மாநாடுகள், சந்திப்புகள் பலவற்றில் கலந்துகொள்ளவுள்ளனர். ஊடகங்களுக்கான அச்சுறுத்தல் விடயத்தில் இலங்கை கவனத்துக்கு உரிய நாடாக ஆகிகியருக்கிறது.

சென்ற 2005ஆம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 63 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1300 ஊடகவியலாளர்கள் உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று எல்லை கடந்த பத்திரிகையாளர் அமைப்பின் இவ்வருட ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. கடந்த ஒரு தசாப்தத்துக்குள் அதிக எண்ணிக்கையான சம்பவங்கள் 2005இலேயே நிகழ்ந்துள்ளதாகவும் அந்த அளிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் ஊடகங்கள்

ஈழப்போராட்டத்தின் விளைவாக சிங்கள-தமிழ் சமூகங்களுக்கிடையே வழுப்பெற்றுவரும் துரவமயமாதலுக்கும் இந்த ஊடக துருவமய செய்தியிடலும் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துவருகிறது. தமிழ்ச் சூழலில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது.

குறிப்பாக 1992 பெப்ரவரியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் ஊடகங்கள், மற்றும், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் மத்தியில் மிகப்பெரும் மாறுதல் ஏற்படுத்தப்பட்டது. புலிகளே தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள் எனும் கருத்தாக்கத்தை வலுப்படுத்துவதற்காக செய்யப்பட்ட முயற்சிகளின் விளைவாக விடுதலைப்புலிகளை நிபந்தனையின்றி ஆதரவு வழங்கும் போக்கு வலுப்பெற்றது. போகப்போக அவ்வாறு நேசரிதியான விமாசனங்களைக் கூட எதிரியின் விமர்சனங்களாகவும், புலிகளுக்கு எதிரானதாகவும் புனையப்பட்டது. புலிகளுக்கு எதிரான விமர்சனம் தமிழர்களுக்கு எதிரான விமர்சனமாக பிரச்சாரப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக மெதுமெதுவாக அனைத்து சக்திகளும் விமர்சனங்கள் செய்வதிலிருந்து பின்வாங்கியதுடன், பலர் ஒட்டுமொத்தமாகவே கண்மூடித்தனமான புலிஆதரவு நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கினர். அவ்வாறு செய்யாவிட்டால் தாம் தமிழ் சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்படுவோம்... தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்கிற பீதிக்கு உள்ளாக்கப்பட்டனர் இவ்வாறான அரசியல், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள்.

இதன் உச்சம் என்னவென்றால் போட்டிபோட்டுக்கொண்டு தம்மை புலி ஆதரவாளர்களாக காட்டி தாம் புலி - எதிர்ப்பாளர்கள்- இல்லை என்பதை நிறுவ முயற்சித்தது தான்.

உண்மையைச் சொல்லப்போனால் தென்னிலங்கையில் சிங்களப் பத்திரிகைகளுக்கு கூட இந்த நிலை ஏற்படவில்லை.

தேசியத்தை உயர்த்திப் பிடித்தலே இன்றைய வியாபார வெற்றிக்கு தந்திரோபாயமாக அமையும் நிலை தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சிங்கள மொழி ஊடகங்களில் செய்தியிடல் மற்றும் கருத்தாக்கங்களுக்கான பத்தி எழுத்துக்கள் என்பன பல, அரசையும் பேரினவாதத்தையும் அம்பலப்படுத்தத்தான் செய்கின்றன. அந்த நிலை தமிழில் இல்லை என்பது தான் இன்றைய கசப்பான உண்மை.

ஏதோ இன்று இலங்கைக்கு வெளியில் இணையங்களின் வாயிலாகவும், வேறும் சில இலத்திரனியல், ஊடகங்கள் மூலமும் மறைக்கப்பட்ட செய்திகள் வெளிவந்த போதும், மாற்றுக்கருத்தாக்கங்கள் வெளியிடப்படுகின்ற போதும் அது பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டபடி சிறு அளவில் உயிர்வாழத்தான் செய்கின்றன.

அவசரகாலசட்டம்

2005ஆம் ஆண்டு ஊடகவியலாளர்கள் பலருக்கும் அச்சுறுத்தல் நிறைந்த ஆண்டு. கொலை, பயமுறுத்தல், சித்திரவதை கைது, தடுத்துவைப்பு, வீடுகள் சோதனையிடல், பத்திரிகையாளர்களின் உடமைகள் சேதப்படுத்தல், அவை பறிக்கப்படல் மற்றும் பத்திரிகைக் காரியாலயங்கள் மீதான தாக்குதல்கள் சோதனையிடல் தொலைபேசி மிரட்டல் என பல்வேறு சிரமங்களுக்கு ஊடகங்களும் ஊடகவியலாளாலர்களும் ஆளானார்கள்.

உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் தொடர்ந்த போதும் அரசும் ஆயுதக்குழுக்களும் அவற்றை சற்றும் லட்சியம் செய்யதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் மீதான அடக்குமுறையை மேலும் சட்டபூர்வமாக ஆக்குவதற்கு அரசும் எத்தனித்துக்கொண்டிருந்த வேலை செப்டம்பர் மாதம் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலைசெய்யப்பட்டார். இது அரசுக்கு சாதகமாக இருந்தது. தமிழர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்க்கவும், ஊடகங்களின் குரலினை நசுக்கவும் இதற்கு முதலும் அரசுக்கு கிடைத்த சட்டபூர்வமான ஆயுதமாக அவரசரகால சட்டமே இருந்து வந்தது. செப்டம்பர் 21ஆம் திகதி அவரகாலசட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாராளுமன்ற வாக்களிப்பு இனங்களுக்கிடையேயான பிளவினை அப்பட்டமாக கோடிட்டு காட்டியது. 94 வாக்குகள் வித்தியாசத்தில் இது நிறைவேற்­றப்பட்டது. 118 வாக்குகள் அவரகால சட்டத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்டன. ஆதரவளித்தோர் அனைவரும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள். 24 வாக்குகள் மட்டுமே எதிராக அளிக்கப்பட்டன. அவை அனைத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பி­னர்களது. இதில் 20 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். இருவர் மலையக மக்கள் முன்னணியினர். ஒருவர் மனோ கணேசன் மேல்மாகாண மக்கள் முன்னணி. அடுத்தவர் மகேஸ்வரன் (ஐக்கிய தேசியக் கட்சி).

கடந்த காலங்களில் தணிக்கை அமுல்படுத்தப்பட்டதும் ஊடகங்கள் தண்டிக்கப்பட்டு அவற்றை இழுத்து மூடியது எல்லாமே இந்த அவரகால சட்டத்தை பாவித்துத்தான் நிறைவேற்றப்பட்டது. 1948இல் சுதந்திரம் கிடைத்தது தொடக்கம் இந்த 58 வருட காலத்திற்குள் ஏறத்தாழ 37 வருடங்கள் இலங்கை அவரகால சட்டத்தின் கீழ் தான் ஆட்சி செலுத்தப்பட்டிருக்கிறது. அதிகமான தட­வைகள் அவசரகாலசட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது இலங்கையிலாகத் தான் இருக்கும். இது கின்னஸ் சாதனை என்றும் கூறப்படுகிறது.

சுனாமி தாக்குதலுக்குப் பின் அதனைக் காரணமாக் கொண்டு ஜனவரி 4ஆம் திகதி ஜனாதிபதி சந்திரிகா தனது நிறைவேற்று அதிகாரத்தினைப் பாவித்து அவசரகாலசட்டத்தை பாராளுமன்றத்தின் அனுமதியில்லாமலேயே பிரகடனப்படுத்தினார். 14 நாட்களுக்ளுக்குள் அவர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவேண்டும். மீண்டும் 3ஆம் திகதியன்று அவசரகாலசட்டத்தை நீடிப்பதாக அறிவித்ததார். பெப்ரவரி 14ஆம் திகதி தான் மீண்டும் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டது. இதனை பல்வேறு மனித உரிமை இயக்கங்கள் கண்டித்திருந்தன.

ஊடக இயக்கங்கள்

ஊடகச் சுதந்திரம் என்பதானது ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரதான கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் சேர்த்துக்கொள்­ளும் ஒரு விடய­மாக ஆக்கப்பட்டதற்கான காரணமே அது அவ்வளவு தூரம் சர்ச்சைக்குரிய, முக்கியத்துவத்துக்குரிய விடயமாக ஆகியிருப்பதால் தான். ஊடகச் சுதந்திரத்தை பாதுகாப்பதாக பல்வேறுபட்ட உறுதிமொழிகள் இவற்றில் அளிக்கப்பட்­டாலும் தேர்தலின் பின் ஆளுங்கட்சியும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி அனைத்துமே ஊடகங்களுக்கு எதிராக மீது பாய்வது சாதாரணமான ஒன்று. 1992இல் பிரேமதாச அரசாங்க காலத்தில் நிகழ்ந்த ஊடகங்களுக்கெ­திரான அடக்குமுறைக்கு எதிராக அனைத்து ஊடக­வியலாளர்களும் ஏனைய அரசியல் சக்திகளுடன் இணைந்து சுதந்திர ஊடக இயக்கம் (FMM - Free Media Movement) ஆரம்பிக்கும் போது அதில் தலைமை தாங்கியவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுமே. ஆனால் ஊடகவியலாளர்க­ளுக்கு அதிக அச்சுறுத்தல்கள், படுகொலைகள் நிகழ்ந்ததும் இவர்கள் காலத்தில் தான்.

இதே வேளை 1995இல் 3வது ஈழ யுத்தம் தொடங்கிய போது தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் தலைதூக்கியபோது, குறிப்பாக தமிழ் பத்திரிகையா­ளர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துச் சென்ற போது சுதந்திர ஊடக இயக்கம் கண்டுகொள்­ளாத சந்தர்ப்பங்களை தமிழ் ஊடகவியலாளர்கள் அவதானித்தனர். சுதந்திர ஊடக இயக்கதின் நிர்வாகத்திலும் தமிழ் ஊடகவியலாளர்கள் அப்போது தெரிவு செய்யப்படவில்லை. இந்நிலைமையானது ஊடகவியலாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிற இனத்துவ துருவமயம் அப்பட்டமாக தெரியவே 1999இல் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் (SLTM- Sri LankaTamil Media Alliance) என்கிற பெயரில் ஊடக அமைப்பொன்றை நிறுவிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்க­ளுக்­குமான அச்சுறுத்தல், அடக்குமுறைகள் இந்த வருடம் மேலும் அதிகரிக்கக்கூடும் என பரவலாக அஞ்சப்படுகிறது.

இலங்கையின் உள்நாட்டு அரசியல் பதட்ட நிலைமையானது எந்த நேரத்திலும் எவருக்கும் எதுவும் நடக்கலாம் என்கிற நிலையே தொடர்கிறது. ஊடகவியலா­ளர்களைப் பொருத்தவரை எமன் எந்த ரூபத்தில் வருவான் என்பது நிச்சயமாக சொல்ல­முடியாத நிலையே தொடர்கிறது. ஏனெனில் சுதந்திர ஊடகவியலாளர்க­ளுக்கான அச்சுறுத்தல் சகல மட்டங்களிலிருந்தும் தான் இருக்கின்றன. இது வரை நடந்து முடிந்த சம்பவங்களில் பல யாரால் மேற்கொள்­ளப்­பட்டது என்பதை அடித்து கூற முடியாத நிலையே இன்னமும் நீடிக்கிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.