Friday, January 30, 2009

ஊடகங்களும் பண்டாரநாயக்கா சேனநாயக்கா குடும்பங்களின் செல்வாக்கும்

என்.சரவணன்

ஜனாதிபதித் தேர்தல் ஆயத்தங்கள் சூடு பறக்க 13 வேட்பாளர்களுமாக செய்துகொண்டி­ருக்க பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஆளும் வர்க்க குழுமங்கள் ஊடகங்களை தமது கட்டுப்பாட்டுக்­குள் கொண்டு வரவும் அல்லது அவற்றை கைக்குள் போட்டுக்கொள்ளவுமாக முயற்சிகளைச் செய்து வருகின்றன. அரச ஊடகங்களான, ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி சேவை (ITN) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) என்பவற்றை பொ.ஐ.மு.வும், டீ.என்.எல். (TNL) தொலைக்காட்சிச் சேவை மற்றும் ஒலிபரப்புச் சேவை (டீ.என்.எல். ரணிலின் சகோதரன் ஷான் விக்கிரமசிங்கவின் நிறுவனம் என்பது தெரிந்ததே.) என்பனவற்றை ஐ.தே.க.வும் தமது கைக்குள் போட்டுக்கொண்டுள்ளன. இந்த இரு பிரதான கட்சிகளும் இவ்வாறு இலத்திரனியல் ஊடகங்களை மட்டுமன்றி அச்சு ஊடகங்களையும் இவ்வாறு தமது கைக்குள் கொண்டு வருவதற்கான எத்தனிப்புகளை முனைப்பாக தற்போது செய்து வருகின்றன. (ஐ.தே.க. சண்டே லீடரையும் பொ.ஐ.மு லேக் ஹவுஸ் பத்திரிகைகளையும் ஏலவே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன.)

ஐ.தே.க. இவ்வாறு ஆளுங்கட்சியை அம்பலப்படுத்த ஊடகங்களை பயன்படுத்துவது ஆளுங்கட்சிக்கு பெரும் தலையிடியாகிவிட்டிருக்­கிற நிலையில் திடீரென தகவல் தொடர்பு அமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதித்தேர்தல் சட்டத்தின்படி அரச தொலைக்காட்சிச் சேவைக­ளில் மட்டும்தான் ஜனாதிபதி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யமுடியும் என்று கூறி அந்தச் சட்டங்களின் மூலம் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்­களை நிறுத்தும் முயற்சியில் இறங்கவே, ஏனைய தனியார் தொலைக்காட்சி சேவைகள் மற்றும் தொடர்பூடகவியலாளர்கள் இதற்கு எதிராக கிளம்பியுள்ளனர். தொலைக்காட்சி சேவைகள் இலங்கைக்கு அறிமுகமாகுமுன் (அதாவது 1972இல்) கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி அரசு கருத்துச் சுதந்திரத்தை பறிக்க முயற்சிக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அரச பயங்கரவாதத்தை பல்வேறு பரிமா­ணங்களில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வழிமுறைகளின் மூலம் மேற்கொள்வதை பொதுப்புத்தி மட்டத்தில் கூட எவராலும் அறிய முடியும். ஒரு அடக்குமுறை அரசு அப்படித்தான் செய்யும். செய்து வருகிறது. ஆனால் அதே வேளை இலங்கையில் தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் இலங்கையின் ஆதிக்க சித்தாந்த வெறியைப் பரப்புவதில் ஆற்றி வரும் பாத்திரத்தை எவரும் அறிவர்.

இலங்கையில் ஒரு புறம் தமிழ் மக்கள் மீது கடும் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற நிலையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தைப் பலப்படுத்துவதில் டீ.என்.எல். தொலைக்காட்சி சேவையின் பாத்திரம் முக்கியமானது.

இலத்திரனியல் ஊடகங்களின் வருகை

இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகத்தோடு அந்நிய ஏகாதிபத்திய பல்தேசியக் கம்பனிகள் இலங்கையில் கடைவிரிப்பதெனில் தமது நுகர்பொருள் கலாசார பிரச்சாரத்துக்காக இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களின் வியாபகப்படுத்துவது முன்நிபந்த­னையாகக் கருதின. போட்டிமிக்க திறந்த சந்தையில் இது அத்தியாவசியமான ஒன்றெனக் கருதிய முதலீட்டாளர்கள் இலங்கையில் தொலைக்காட்சி சேவையை ஆரம்பிப்பதில் எமது நாட்டுத் தலைவர்களை விட அதிக அக்கறை எடுத்துக்கொண்டது இதன் காரணமாகத் தான். 1978இல் ஜப்பான் அரசு இதற்கு அதிகளவு உதவியிருந்தது. இலங்கையில் முதலாவது தொலைக்காட்சி சேவையான ஐ.டீ.என். (சுயாதீன தொலைக்காட்சி சேவை 1979 ஏப்ரல் 14ஆம் திகதி முதலாவது ஒலிபரப்பை ஆரம்பித்தது.

இலங்கையியை அந்நிய சுரண்டலுக்கு திறந்து விட்ட அன்றைய ஜனாதிபதி ஜே.ஆரைப் பயன்படுத்தி, ஜே.ஆரின் உறவினரான ஷான் விக்கிரமசிங்கவும், அனில் விஜேவர்தனவும் கூட்டுச் சேர்ந்து இந்த தனியார் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தனர். அந்த ஷான் விக்கிர­மசிங்க தான் இன்றைய டீ.என்.எல். நிறுவனத்தின் உரிமையாளரும் ரணில் விக்கிரமசிங்கவின் சகோதரனுமாவார். (இவரின் மகள் இஷினி விக்கிரமசிங்க இந்த டீ.என்.எல். சேவையின் செய்திப் பொறுப்பாளராக இருந்து புலிகள் குறித்த ஒரு செய்தியை வெளியிட்டார் என்று அரசினால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவரும், அதன் பின்னர் புகழ்பெற்ற நிகழ்ச்சியான ஓல்வேஸ் பிரேக் டவுன் நிகழ்ச்­சியை தயாரித்து வழங்கி பின்னர் அதனை நிறுத்த தகப்பனார் செய்த முயற்சியின் விளைவாக அதிலிருந்து விலகி இன்று அரசாங்கத்துடன் இணைந்து கொழும்பு மேற்குக்கான பொ.ஐ.மு.­வின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்)

1979 யூன் மாதம் 5ஆம் திகதி 39’5 இலக்கம்கொண்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஜே.ஆர் அரசாங்கம் ”வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி சேவை”யை (ITN) அரசுடமையாக்கியது. 1982ஆம் ஆண்டு பெப்ர­வரி 15இலிருந்து ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையையும் ஆரம்பித்தது அரசாங்கம். அதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி சேவைகள் பற்றி பார்க்க அட்டவணையில் பார்க்கவும்.

இவற்றில் இன்றும் இனவாதத்தைக் கக்குகின்ற நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்ற முக்கிய சேவை டீ.என்.எல். ஆகும். இச்சேவைக்கும் ரணி­லுக்கும் தொடர்பில்லை என்று ரணிலே கூறி வருகின்ற போதும், அதன் மீதான மறைமுக கட்டுப்பாடு ஊரறிந்த இரகசியம். ”ஓல்வேஸ் பிரேக்டவுன்” நிகழ்ச்சி ரணிலுக்கு பாதகமானது என்று கூறி அதனை நிறுத்துவதற்கு காரணமாக இருந்ததும் அதன் விளைவாக இஷனி வெளியேற நேரிட்டதும் ரணிலால் தான். அரசின் செய்திகளை மறுக்கின்ற சாராம்சத்தைக் கொண்டதும், அரசை அம்பலப்படுத்துகின்ற செய்திகளையும் வெளிப்­படுத்துகின்ற வகையிலும் ஐ.தே.க.வின் பிரச்­சாரங்களை கொண்டு செல்வதும் டீ.என்.எல்லின் வழமை. இந்த பொ.ஐ.மு. எதிர்ப்பு நிலை சில வேளைகளில் போர்முனைச் செய்திகளை புலிகளுக்கு சாதகமான வகையிலும் அமைந்து விடுவது உண்டு. ஐ.தே.க.வின் ஆதரவு பத்திரிகையான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை வைத்து ஆங்கிலத்திலும் சமுதித்தவை வைத்து சிங்களத்திலும் அரசை அம்பலப்படுத்தும் அரசியல் விவாதங்களை டீ.என்.எல். தொடர்ந்து நடத்தி வருகிறது. அரசைக் கடுமையாக அவ்வவ் காலகட்டங்களில் கண்டனம் செய்பவர்களைப் பிடித்து அவர்களுக்கு களமமைத்துத் கொடுப்பதற்கூடாக இது நடைபெறுகிறது.

அது போல கங்கொடவில சோம ஹிமியை ஊதிப்பெருப்பித்ததும், அவரைப்போலவே வேறும் பல இனவாதத் தரப்பினரை வைத்து இனவா­தத்தை திட்டமிட்டு கக்கவைத்ததிலும் டீ.என்.எல். சேவைக்கு முக்கிய பங்குண்டு. சிங்கள வீரவிதா­னவின் நிகழ்ச்சிகளை அவர்களின் செயற்பாடுகள் என்பவற்றுக்குப் பெரும் பிரச்சாரத்தையும் டீ.என்.எல்லைத் தவிர வேறு எந்த தொலைக்­காட்சி சேவையும் அதிகமாக வழங்கியது இல்லை. அதுவும் விளம்பரமின்றி தமது தயாரிப்பாகவே மணத்தியாலக்கணக்கில் அவ்வாறு ஒளிபரப்பப்­பட்டுள்ளன.

பொ.ஐ.மு. அரசாங்கம், தமது கட்டுப்பாட்­டுக்குள் இருக்கின்ற ஊடகங்களை ஆளுங்கட்சி­யின் நலன்களுக்குப் பயன்படுத்துவது கிடையாது என்று கூறுவது போலவே இந்த டீ.என்.எல் சேவைக்கும் தமக்கும் எந்த தொடர்பும் கிடை­யாது என்று ரணில் போன்றோர் கூறிவருகின்றனர்.

1990 ஒக்டோபர் 20ஆம் திகதி டெலிஷான் லிமிட்டட் நிறுவனம் தொலைக்காட்சி சேவை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பத்தை ஷான் விக்கிரமசிங்க செய்திருக்கிறார். அதனை அன்றைய கலாச்சார அலுவல்கள், தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த வி.ஜே.மு.­லொக்குபண்டாரவின் மூலம் அனுமதிக்கச் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான மேற்படி திகதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் அவர் தாம் அதற்கு முன்னர் ”கம் உதாவ” மற்றும் படை­யினருக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை தயா­ரித்து வழங்கி வந்தவ­ரென்றும் தான் தொட­ரப்போகும் தொலைக்­காட்சி சேவைக்கு படையில் இருந்து அங்­கவீனமுற்றிருப்போருக்கு அச்சேவையில் தொழில் முன்னுரிமை வழங்குவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். (இது குறித்த கடிதங்­களின் பிரதிகளை சிங்­கள வாராந்த பத்திரிகையான சிலுமின 18-07-99இல் வெளியாகி­யிருக்கிறது.) 1991-03-18 கூடிய அமைச்ச­ரவையில் இதற்கான அனுமதி நிறைவேற்­றப்பட்டுள்ளது. 1991-08-07 அன்று இதற்கான முழுமையான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஷான் விக்கிரமசிங்க தமது நிறுவனமான டெலிஷான் லிமிட்டட்டை, டெலிஷான் நெட்வேர்க் பிரைவேட் லிமிட்டட் என பெயர் மாற்றம் செய்வதாக தகவல் அமைச்சுக்கு அறிவிப்பதற்காக எழுதப்பட்ட 05-05-91 திகதியிடப்பட்ட கடிதத்தில் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டு விலாசமான இல.115, 5வது ஒழுங்கை, கொழும்பு-07 எனும் விலாசமிடப்பட்டுள்ளது. இதே விலாசம் தான் இது தொடர்பான ஏனைய கடிதங்களுக்குமான விலாசமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய உலகில் தகவல் தொழில்நுட்பம் வேகமான மாற்றத்துக்கான பாத்திரத்தை ஆற்றி வரும் நிலையில் கணிணி மற்றும் இணையத்தின் தொழிற்பாடு என்பவை மேலும் ஆழமாக நிலைநிறுத்தப்படும் வரை இந்தத் தொலைகாட்சி மற்றும் வானொலி போன்ற இலத்திரனியல் ஊடகங்கள் பாரிய பங்களிப்பை ஆற்றி வரவே செய்யும். இப்படிப்பட்ட நிலையில் இலங்கையின் இந்த தகவல் துறையை கைப்பற்றி தமது நலன்களை அடைய முயற்சி செய்யும் சக்திகள் ஏறாளம். பெருமுதலாளிகள், தரகுமுதலாளிகள், அவர்களின் கருவிகளான ஏனைய ஆதிக்க சக்திகள் மற்றும் அளும் குழுமங்கள் என பல்வேறு சக்திகள் உள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரை இலங்கையில் முக்கியமாக இரண்டு குடும்பத்­தினரின் செல்வாக்கு தான் இலங்கையின் தொடர்பூடகத் துறையிலும் சரி அரசியல் துறை­யிலும் சரி போட்டிபோட்டு தமதாதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றனர். அவர்களின் இந்தப்போட்டிக்குப் பின்னால் வெறும் குடும்ப அந்தஸ்து மற்றும் சாதியம் என்பவை முக்கியமாக தொழிற்பட்டிருப்பதை கூர்மையாக அவதா­னித்தால் வெளிப்படும்.

சேனநாயக்க குடும்பம் மற்றும் பண்டாரநா­யக்காவின் குடும்பம் என்பவற்றைச் சேர்ந்த­வர்களின் இந்த மோதலை விளங்குவதென்றால் அதன் பின்புலத்தை சற்று விளங்குவது அவசியம்.

சேனநாயக்க குடும்பம் கொவிகம சாதிப் பின்னணியைக் கொண்டது. ஆனால் பண்டாரநா­யக்காவின் குடும்பம் அளவுக்கு கொவிகம சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலப்பி­ரபுத்துவ மேற்தட்டு பின்னணியைச் சேர்ந்தவர்கள் இல்லை. எவ்வாறிருந்த போதும் நவீன பொருளா­தாரத் துறையில் அவர்கள் காலப்போக்கில் மூதலீடுகளைச் செய்தும், தரகுமுதலாளித்துவ பாத்திரத்தை வகித்ததாலும் அவர்களின் பொரு­ளாதாரப் பின்னணி இலங்கையில் முக்கியத்து­வமானது. (குடும்பப் பின்னணியை விளக்கும் மரவடிவிலான வரைபைப் பார்க்க)

இன்று இலங்கையின் அதிபேரினவாதத்தைக் கக்குகின்ற பத்திரிகைகளான த ஐலண்ட் மற்றும் திவய்ன ஆகிய அதிவிற்பனையையுடைய பத்தி­ரிகைகளை வெளியிடும் ”உபாலி நிறுவனம்” ரத்வத்தை குடும்பத்துக்கு சொந்தமானது என்பதும் (சீவலி ரத்வத்தை-இவர் இலங்கை பாதுகாப்பு படைக்கு தேவையான ஆயுத இறக்குமதி ஏஜென்டாக நெடுங்காலமாக இருந்து வருவதைப் பலர் அறிந்திருப்பர். அது போல திவய்னவின் பேரினவாதப் போக்குக்குக் காரணம் இந்த ஆயுத கொமிசனின் மூலம் கிடைக்கின்ற பெரும் லாபத்தை தக்கவைப்பதே. இனவெறியை அப்படியே தக்கவைப்பதும் அதனை கூர்மைப்­படுத்துவதுமே போரை அதிகரிக்கச் செய்வதோடு ஆயுதத் தேவையும் அதிகப்படுத்தும் என்பதை இவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்), இன்னுமொரு தினசரி பத்திரிகையான லங்காதீப மற்றும் சண்டே டைம்ஸ் ஆகியவற்றை வெளி­யிடும் விஜய வெளியீட்டு நிறுவனம் விஜயவர்தன குடும்பத்துக்கு சொந்தமானவை என்பதும் தெரிந்ததே. அது போல ரணிலின் சகோதரன் ஷான் விக்கிரமசிங்க டீ.என்.எல் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளை நடத்தும் டெலிஷான் நெட்வேர்க் பிரைவேட் லிமிட்டட்டுக்கு சொந்­தக்காரர் என்பதும் முக்கியமானது.

இந்தக்குடும்பங்கள் தான் இன்றைய பேரின­வாத, சாதிய ஆதிக்க, மற்றும் நுகர்பொருள் கலாசாரத்தைத் திணிக்கின்ற, அந்நிய முதலீட்டுத் துறைகளுக்கு பிரசாரம் செய்கின்ற, ஆணாதிக்க சித்தாந்தங்களை நிலைநிறுத்துகின்ற ஆளும் பிரதான கட்சிகள் இரண்டையும் பிரதிநிதித்துவப்­படுத்துகின்ற முக்கிய சக்திகளாக இருக்கின்றன என்பதை விளங்கிக் கொள்வோம். மேற்தோற்­றத்தில் இவை அத்தனை பெரிய ஒன்றாக வெளித் தெரியாவிட்டாலும் இந்த சக்திகளின் வர்க்கப் பின்னணியானது இந்த அத்தனை ஆதிக்க சித்தாந்தங்களையும் தக்க வைப்பதன் மூலம் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றன என்றால் அது மிகையில்லை. இப்படியான இன்னொரு கோணத்திலான பார்வை வேறு வெளிச்சங்க­ளையும் எமக்கு வெளிப்படுத்தலாம்.

சரிநிகர்-185