Friday, January 30, 2009

இரு ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற அடக்குமுறைகள் பற்றிய பதிவு




என்.சரவணன்

16 ஓகஸ்ட் 2004

தினமுரசு பத்திரிகையாளர் பாலநடராஜ ஐயர் அவரது வீட்டுக்கு அருகாமையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே இருந்த மரண அச்சுறுத்தல் காரணமாக தஞ்சம்கோரி நாட்டைவிட்டு வெளியேற எத்தனித்திருந்தார். தினமுரசு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அற்புதராசா நடராசா 1999 நவம்பரில் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜனவரி 2004

உடகம புத்த ரக்கித்த தேரோ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவேளை அதனை செய்தியிடச் சென்ற ஏனைய சிங்கள பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதித்த போதும் தினக்குரல் பத்திரிகையாளர் வே.தவச்செல்வம் என்பவருக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டதுடன் மேலும் ஓரடி எடுத்து வைத்தால் கொலை செய்வதாக மேஜர் டி.எம்.திசாநாயக்க மிரட்டியுள்ளார்.

3 மே 2004

இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட அவரது வீடு திடீர் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. இது பல ஊடக அமைப்புக்களால் கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டபோதும் மீண்டும் யூலை 23அன்றும் அதே போன்று சுற்றிவளைத்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

31 மே. 2004


மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை ஐயாதுரை நடேசன் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஸ்தலத்திலேயே பலியானார். இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இராணுவு சுற்றிவளைப்புக்கு இவரது வீட்டு உள்ளாக்கப்பட்டு திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஏனைய மட்டக்களப்பு பத்திரிகையார்களான துரைரட்ணம் தலைமறைவானார். ஷன் தவராஜா மட்டக்களப்பை விட்டு வெளியேறினார். இப்போது இவர்கள் நாட்டை விட்டே தஞ்சம் கோரி வெளியேறிவிட்டனர்.

9 ஜுன் 2004

குறிப்பிட்ட ஒரு வீடியோ அறிக்கை தொடர்பாக தினக்குரல் பத்திரிகையாளர் கே.பி.மோகன் இனந்தெரியாத கும்பலால் தாக்கப்பட்டார்.

11 ஜுன் 2004

லக்பிம பத்திரிகையின் பிரேதச பத்திரிகையாளர் இரத்தினபுரியில் செய்தி சேகரிக்கச் சென்ற போது பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

25 ஜுன் 2004

தினக்குரல் பத்திரிகையின் நிருபர் டி.வேதநாயகம் கருணா குழுவைச் சேர்ந்த ஒருவரின் பத்திரிகையாளர் சந்திப்பை செய்தியிட்டதற்காக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இராணுவ பாதுகாப்பில் இருப்பதாகவும் ஊடக சுதந்திர நிறுவனங்களுக்கு அறிவித்திருந்தார். (Reporters Without Borders)

14 ஜுலை 2004

யாஸ்மின் ரக்ஷிகா (தி ஐலண்ட்), ஜனித் டி சில்வா (ஐ.டி.என்), சுஜீவ பிரியதர்ஷன (சுவர்ணவாகினி), எஸ்.ஏ.வை.டி.சில்வா (லங்காதீப) ஆகியோர் கொஸ்கடவுக்கு செய்தி சேகரிப்புக்காக சென்ற இடத்தில் பொலிஸாரால் புகைப்படக்கருவிகள் பறிக்கப்பட்டு பலத்த தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

17 ஒக்டோபர் 2004

சுவர்ணவாகினி தொலைக்காட்சி நிலையத்துக்கு கிரேனேட் வீசப்பட்டு சேதத்துக்கு உள்ளானது.


26 ஒக்டோபர் 2004

லேக் ஹவுஸ் பத்திரிகையைச் சேர்ந்த சஞ்சய அசேல ஐ.தே.க.வின் ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் தாக்கப்பட்டு, மிரட்டலுக்கு உள்ளானார்.

24 நவம்பர் 2004


கொடிகாமத்தில் இராணுவ வாகனத்துக்கு இந்து மதத்தலைவர் பலியானதைத் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற உதயன, ஈழநாடு பத்திரிகையாளர்கள்க ஜேந்தின், செழியன், சிவருபன் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகி அவர்களின் புகைப்பட கருவிகள் பறிக்கப்பட்டன.

8 டிசம்பர்2004


மட்டக்களப்பிலுள்ள தினக்குரல் அலுவலகம் கிரேனேட் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது 3 ஊழியர்கள் கடமையில் இருந்தனர்.

மார்ச் 2005

தினமுரசு பத்திரிகைக்கான மட்டக்களப்பு நிருபர் எஸ்.கமலநாதன் சுட்டுக்கொல்லப்பட்டார்.


11 மார்ச் 2005

யாழ்ப்பாணத்தில் நடந்த எதிர்பார்ப்பாட்டத்தை அறிக்கையிடச் சென்றிருந்த வின்சன்ட் ஜெயன் (தினகரன்), ரட்ணம் தயாபரன் (தினக்குரல்) ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் படையினரால் சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டது.

11 ஏப்ரல் 2004

புத்தளம் மாவட்ட லங்காதீப நிருபர் ஹிரன் பிரியங்க ஜயசிங்க செய்தி சேகரிப்புக்காக புகைப்படம் எடுத்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

29 ஏப்ரல் 2005

பிரபல பத்திரிகையாளர் தராகி என்று அழைக்கப்படும் சிவராம் பம்பலப்பிட்டியில் தனத நண்பர்களை ஒரு ரெஸ்டுரன்டில் சந்தித்து விட்டு திருப்பிக்கொண்டிருந்த போது வானில் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். அடுத்த நாள் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் அவரது சடலம்பாராளுமன்ற கட்டடத்துக்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்டது.

30 ஏப்ரல் 2005

சிவராமின் கொலையடுத்து வீரகேசரியின் ஆசிரியர் வி.தேவராஜா அவர்களை தொலைபேசியின் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்கள். இனந்தெரியாத நபர்களால் தனத வீடு கண்காணிக்கப்படுவதாகவும் பின்னர் அவர் முறைப்பாடு செய்திருந்தார்.

18. மே 2005

முன்னாள் திருகோணமலை மேயரும் முன்னாள் தினகரன் பத்திரிகையாளருமான பெரிய அடி சூரியமூர்த்தி (55) திருகோணமலை அவரது வீட்டு வாசலுக்கு அழைக்கப்பட்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் வயிற்றில் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

2 ஜுன் 2005

வவுனியாவிலுள்ள சன் டிவி நிலையம் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது. இது முன்னாள் டெலோ உறுப்பினரொருவரால் நடாத்தப்பட்டுக்கொண்டிருந்தது.

ஜுன் 2005


ஈழநாதம் பத்திரிகையின் மட்டு அம்பாறை வினியோகஸ்தர் கண்ணமுத்து அரசகுமார் அப்பத்திரிகை விநியோகித்ததற்காக கொல்லப்பட்டார்.

30 ஜுலை 2005


ஆரையம்பதியில் வைத்து தினமுரசு பத்திரிகையாளர் சுடப்பட்டு பலத்த காயத்துடன் அஸபத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு இரு நாட்களுக்கு முன்னர் தான் (RSF-Reporters Without Borders) எல்லைகடந்த பத்திரிகையாளர் அமைப்பு நோர்வே நாடு பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பதில் இருசாராரையும் நிர்ப்பந்திக்கும்படி கோரியிருந்தது.

12 ஓகஸ்ட் 2005

பிரபல தொலைகாட்சி மற்றும் வானொலி அறிவிப்பாளர் ரேணங்கி செல்வராஜன் மற்றும் அவரத கணவர் கொழும்பில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

29 ஓகஸ்ட் 2005

யாழ் சுடர்ஒலி பத்திரிகை காரியாலயத்தின் மீது கிரனேட் எரியப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானது. பாதுகாப்பு ஊழியர் கொல்லப்பட்டதுடன் ஊழியர்கள் இருவர் படுகாயத்துக்குள்ளானார்கள்.

30 ஓகஸ்ட் 2005


கொழும்பில் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை செய்தியிட சென்ற உதயன், சுடர்ஒலி பத்திரிகையின் நிருபர் யதுர்சன் பிரோமசந்திரன் ஜே.வி.பி. உறுப்பினர்களால் தாக்கப்பட்டு உடமைகள் பறிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் விடுதலைப் புலியைச் செர்ந்தவர் என்று ஜே.வி.பி.யினர் கூறியிருந்தனர். ஒரு நாள் பொலிசில் தடுத்து வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். இதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் தலைவர்களில் ஒருவரால் பகிரங்கமாகவே கூட்டமொன்றில் பத்திரிகைகளுக்கான அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டதென பத்திரிகையார் பாதுகாப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது.

16 ஒக்டோபர் 2005

சண்டே லீடர் மற்றும் இருதின ஆகிய பத்திரிகைகளை அச்சிடும் இரத்மலானை அச்சகத்துக்குள் நுழைந்த ஆயதக் கும்பல் அங்கிருந்தவர்களைத் தாக்கி அதனை நிறுத்தும்படி கூறிவிட்டு 40 தொகுதி கட்டுகளை தீயிட்டு கொழுத்தி விட்டுச் சென்றனர்.

ஒக்டோபர் 2005

தினமுரசு பத்திரிகையை விநியோகித்துக்கொண்டிருந்த விநியோகஸ்தர் கிங்ஸ்லி வீரரட்ன கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டு 15 நிமிடத்தில் தினமுரசு காரியாலயத்தில் தரிக்கப்பட்ட வானில் குண்டு வெடித்தது.

29 ஒக்டோபர் 2005

அரச புலனாய்வு உத்தியோகத்தர் ரிஸ் மீடின் என்பவர் தொடர்பாக தகவல் சேகரிக்க சென்ற சண்டே லீடர் பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவியலாளர்களான திருமதி ராணி முஹமட், புகைப்படப்பிடிப்பாளர் பேர்ட்டி மென்டிஸ் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். பேர்ட்டி மென்டிஸ் படுகாயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

15 டிசம்பர் 2005

யாழ் - நமது ஈழநாடு பத்திரிகை காரியாலயம் சுற்றி வளைத்து சோதனையிடப்பட்டது.

17 டிசம்பர் 2005


தினக்குரல் பத்திரிகையாளர் பி.பிரதீபனும் அவருடன் சென்ற தினக்குரல் ஊழியர்கள் இருவரும் கொழும்பு இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து விரல் அடையாளங்கள் எடுக்கப்பட்டு புகைப்படங்கள் பிடிக்கப்பட்டு ஒரு நாள் தடுத்து வைப்பின் பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டின் பின் விடுவிக்கப்பட்டனர்.


19 டிசம்பர் 2005

டிசம்பர் 19 அன்று யாழ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர், விரிவுரையாளர்களின் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார், இராணவும் இணைந்து தாக்கினர். இதன் போது சபேசன் (தினக்குரல்), வின்ஸ்டன் (தினகரன்), ஜெராட் (நமது ஈழநாடு) ஆகியோர் பலமாக தாக்கப்பட்டதுடன் அவர்களின் கமராக்கள் சேதமாக்கப்பட்டன.

22 டிசம்பர் 2005


தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார்.



5 ஜனவரி 2006



இராணுவ சுற்றிவளைப்பில் கைதுக்குள்ளாக்கப்பட்டு கைது க்குள்ளாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் பலர் குறித்த செய்தி சேகரிப்புக்காக சென்ற வீரகேசரி பத்திரிகையின் மூத்த புகைப்படப்பிடிப்பாளர் ஜோய் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு பலத்த விசாரணைக்குள்ளாக்கப்பட்டார்.

5 ஜனவரி 2006

இராணுவ அரண் மீதான கிரனேட் தாக்குதல் குறித்த செய்தி சேகரிக்கச் சென்ற யாழ் தினக்குரல் பத்திரிகையைச் சேர்ந்த பத்திரிகை நிருபர்கள் துரத்தித் தாக்கப்பட்டதுடன் அவர்களின் அலுவலகம் சோதனையிடப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்.

24 ஜனவரி 2006


சுப்பிரமணியம் சுகிர்தராஜா சுடர்ஒலி பத்திரிகையின் நிருபர் திருகோணமலையில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கி தாரர்களால் கொல்லப்பட்டார். இவர் வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வெளியே சென்ற வேளையில் வீட்டுக்கு சமீபமாக கொல்லப்பட்டார்.

1 பெப்ரவரி 2006


ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விமல் வீரவங்சவினால் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

16 பெப்ரவரி 2006


புத்தளத்தில் நிகழ்ந்த அரசியல் கோஸ்டிச் சண்டையை படம் எடுக்கச் சென்ற எம்.டி.வி. பத்திரிகையாளர் பிரசாத் பூணமால் தாக்கப்பட்டு அவரது கமரொக்கள் சேதமாக்கப்பட்டன.

17 பெப்ரவரி 2006


திருகோணமலையைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்களுக்கு (சசிகுமார் -சூரியன் எப்.எம். மற்றும் சாலி மொஹமட் சுடர்ஒலி) கொலை மிரட்டல் கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எதிரி அழிப்பு இயக்கம் என்கிற பெயரில் இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

24 பெப்ரவரி 2006

சுவர்ணவாகினி தொலைக்காட்சி சேவையின் அரசியல் நிகழ்ச்சி நடாத்தும் மனோஸ் திலங்க பொரல்லையில் இரவு நேரம் சென்றுகொண்டிருந்த போது கெப் ரக வாகனத்தில் வந்தவர்களால் துப்பாக்கி மிரட்டலுக்கு உள்ளானார்.