என்.சரவணன்
எங்களோடு வர இருந்தவரும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் மும்முரமாக இருந்தவருமான நண்பர் மது கைது செய்யப்பட்டுள்ள அவலகரமான நிலையிலேயே நாங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நிலை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் எங்களுக்கெல்லாம் கௌரவிப்பு எதற்கு? இப்படிப்பட்ட நிகழ்ச்சி தான் எதற்கு? நாங்கள் இந்த நிகழ்ச்சியையே நடத்தாமல் எமது எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும்...”
இவ்வாறு சிறந்த சிறுகதைத் தொகுதிக்காகக் திருமலையில் நடந்த தமிழ் இலக்கிய விழாவின் போது கௌரவிக்கப்பட்ட மு.பொன்னம்பலம் அவர்கள் அங்கு பேசும் போது தெரிவித்தார். மு.பொவின் இந்தப் பேச்சு இன்றைய எமது அவலத்தைத் துலாம்பரமாக எடுத்துக் காட்டியது. மு.பொவின் இந்தப் பேச்சு அந்த மேடையிலிருந்த சிலருக்கு நாரசமாய் இருந்திருப்பினும், பெரும்பாலானோர் அதனைத் தமது இதயத்தின் குரலாகவே கண்டனர். மு.பொ. பேசி முடிந்ததும் அவரிடம் முனைவர் அரசு நீங்கள் இதனை இந்த இடத்தில் தெரிவிக்காமல் இருந்திருந்தால் நான் தெரிவித்திருப்பேன் என்றார்.
விபவி மாற்று கலாசார நிலையத்தினரால் வெளியிடப்படும் செய்தி இதழின் ஆசிரியரும், சரிநிகரில் இலக்கியப் பத்திகளை எழுதி வருபவரும், இலக்கிய எழுத்தாளருமான தெ.மதுசூதனன் கைது செய்யப்பட்டு ஒரு வாரமும் தாண்டி விட்டது.
இதுவரை பொலிஸ் தரப்பில் கைதுக்கான காரணம் எதுவும் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி மாலை 5.50 மணியளவில் தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த முனைவர் வி.அரசு, மற்றும் ராஜேந்திரம் ஆகியோருடன் காலி வீதியில் ”ஹோலி பெமிலி கொன்வன்ட்” பாடசாலைக்கு அருகில் வைத்து இனந்தெரியாத சிவில் உடை தரித்த நபர்களால் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார் மதுசூதனன்.
இந்தக் கைது எப்படி நடந்தது? பேராசிரியர் அரசு இப்படி விளக்குகிறார் நானும் என்னுடன் தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த பேராசிரியர் இராஜேந்திரனும் நண்பர் மதுவுடன் பம்பலப்பிட்டி கிறீன்ஸ்லண்ட் ஹோட்டலிலிருந்து புறப்பட்டு காலி வீதியில் உரையாடியபடி நடந்து வந்து கொண்டிருந்தோம். கொன்வென்ட்க்கு அருகில் வந்து கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் திடீரென்று மதுவின் தோளில் கையைப் போட்டுப் பிடித்துக் கொண்டார் முதலில் மதுவின் கையைப் பிடித்தவர் அவருக்கு மிக நெருக்கமான நண்பர் யாரோ என நினைத்த போதும் மறுகணமே அந்தப்பிடி ஒரு பொலிசாருடைய பிடி என்பதை உணர்த்திற்று. நாம் சுதாகரித்துக் கொள்ள முன்னரே அவர் ஜீப்பினுள் ஏற்றப்பட்டர். மதுவைப் பிடித்து ஏற்றியவர் வெள்ளை நிற ரீ சேர்ட்டும் நீல நிற முழுக்காற்சட்டையும் அணிந்திருந்தார் ஜீப்பினுள் இருந்த ஏனையோர் சீருடையில் இருந்திருக்கிறார்கள். கணநேரத்துள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. நாங்கள் அதிர்ந்து போனோம்.
பிறகு என்ன நடந்தது?
பொலிஸ் நிலையங்களுடனும், மனித உரிமைகள் அமைப்புகள் பலவற்றுடனும், தமிழ்-சிங்கள அரசியற் தலைவர்களுடனும், பத்திரிகையாளர் அமைப்புகள், வழக்கறிஞர்கள், மனித உரிமையாளர்கள் என்போரால் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் கூட ஏறத்தாழ 17 மணித்தியாளங்கள் வரை ”மது” யாரால் கொண்டு செல்லப்பட்டார்? எதற்காகக் கொண்டு செல்லப்பட்டார்? எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிய முடியாதிருந்தது.
பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி, கிருலப்பனை, நாரஹேன்பிட்டி என்று ஒவ்வொரு பொலிஸ் நிலையமாக விசாரித்த போதும் தாம் கைது செய்யவில்லை என்றும், தமக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்றுமே பதில் கிடைத்தது. இடையில் ஒரு தடவை பம்பலப்பட்டி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்கின்ற ஆறுதல் செய்தியும் கூட பின்னர் விசாரித்ததில் பொய்யானது.
இறுதியில் மறு நாள் ஒரு பத்திரிகையாளர் மூலமாக பேலியகொட பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்தது. தகவலறிந்து மதுவைப் பார்க்கச் சென்ற தகப்பனாரை சந்திக்க பொலிஸார் விடவும் இல்லை. கைதுக்கான காரணம் எதனையும் தெரிவிக்கவுமில்லை.
கைது செய்யப்பட்ட அன்று புதிதாக ஜனாதிபதியால் தலைமை தாங்கும் வகையில் அமைக்கப்பட்ட தொல்லைத் தவிர்ப்பு குழுவுக்கு, மனித உரிமைகள் நடவடிக்கைக் குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போதும் தொலைபேசியை எடுக்க அங்கு எவரும் இருக்கவில்லை. ஆயினும் அக்குழுவின் உறுப்பினர் ஒருவரூடாக அவர்களுக்குத் தகவல் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் மது மீது தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
28ஆம் திகதியன்று தொடக்கம் மது 6ஆம் மாடிக்கு சீ.ஐ.டி.யின் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று வரை அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை திறந்த பல்கலைக்கழகத்தில் கற்கும் மதுவின் இரு சகோதரர்களும் வீட்டில் வைத்து மது ராகவன் (23), மது சொருபன் (22) கைது செய்யப்பட்டு அவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மனித உரிமைகள் நடவடிக்கைக் குழு எனும் அமைப்பு சர்வதேச ரீதியில் பல மனித உரிமைகள் அமைப்புகளுக்கு தெரிவித்து ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர் பாலபட்டபந்தி, தொல்லைத் தவிர்ப்பு குழுவின் செயலாளர் அமைச்சர் லக்ஷ்மன் ஜயக்கொடி போன்றோரின் விலாசம், பெக்ஸ் இலக்கம் என்பவற்றை வெளியிட்டு, இந்த மோசமான அடிப்படை உரிமை மீறலை எதிர்த்து பொறுப்புமிக்கவர்களை நடவடிக்கை எடுக்கக் கோரும்படி சகல மனித நேய அமைப்புகளையும் வேண்டி இன்டர்நெட், மற்றும் ஈ.மெயில் என்பவற்றுக்கூடாக சர்வதேச ரீதியில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதனைச் செய்து இரு நாட்களுக்குள் அதாவது செப்டம்பர் 1ஆம் திகதியன்றிலிருந்து ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழு ”அக்கடிதம் தங்களுக்கு கிடைத்தமை குறித்தும் அதன்மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பதாகவும் மேற்படி இயக்கத்துக்கு பதிலளித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த இனவெறிக்கெதிரான கலைஞர்கள் (Artists Against Racism) என்ற அமைப்பு தம்முடன் தொடர்புடைய அமைப்புகளுக்கூடாக இதனை மேற்கொள்வதாகவும் மேலதிகமாக தெரிவிக்க வேண்டிய சர்வதேச அமைப்புகளின் முகவரிகளையும், இன்டர்நெட் வெப்தள மற்றும் ஈ.மெயில் விலாசங்களையும் கொடுத்துள்ளது.
இது போன்ற இன்னுமொரு அறிக்கையை தொல்லைத் தவிர்ப்புக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ள சுதந்திர பத்திரிகையாளர் இயக்கம் சகலரையும் விழிப்புடன் இதனை கண்டிக்கும்படி கோரியிருக்கிறது. இவ்வமைப்பும் மேற்படி கண்டனங்களை தொடர்புசாதன அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், நீதி அமைச்சர் ஜீ.எல்.பீரிசுக்கும் அறிவிக்கும்படி கோரி அவ்வறிக்கையில் அமைச்சர்களின் விலாசங்களைக் குறிப்பிட்டுள்ளது.
வழமைபோல சிங்கள பத்திரிகைகளின் அழுத்தம் அக்கறை குறைவான போதிலும் இந்தளவு ஆதரவுச் சக்திகளும் இருப்பது தமிழ் பத்திரிகையாளர்களை ஓரளவு நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
மதுவை விடுதலை செய்வதற்கு இவ்வளவு முயற்சிகள் செய்யப்பட்டு வரும் இதே வேளை பொலிஸார் தரப்பில் புதிய புதிய சோடனைக் கதைகள் மாறி மாறி வெளிவந்து கொண்டிருக்கின்றன. உத்தியோகபூர்வமாக இதுவரை எதனையும் தெரிவிக்காத பாதுகாப்புத் துறையினர் வெவ்வேறு தரப்பினருக்கு தொpவித்துள்ள கருத்துக்கள் வேடிக்கையானவை. ஆரம்பத்தில் தமிழ் நாட்டிலிருந்து இலங்கை வந்த பேராசிரியர்களை புலிகளின் பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்வதாக தொலைபேசியின் மூலம் உரையாற்றியதை தாங்கள் பதிவு செய்து வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் முனைவர் அரசு அவர்களிடம் இது குறித்து வினவிய போது ”நான் வந்தது தொடக்கம் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமே இருக்கவில்லை. மது எங்களுடன் தான் அதிக நேரம் இருந்தார். பின்னர் எப்படி தொலைபேசி உரையாடலை பதிவு செய்ததாக தெரிவிப்பர்? அது நிச்சயம் பொய்..!” என்றார்.
கைது செய்யப்பட்ட பாதாளலோக நபர் ஒருவருக்கும் மதுவுக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் தான் மது கைது செய்யப்பட்டதாக இன்னொரு தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.
புலிகளுடைய அரசியற் பிரிவுக்கும் மதுவுக்கும் தொடர்பிருப்பதாக இன்னொரு தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இறுதியாகக் கிடைத்த இன்னொரு தகவல் பொலிஸார் எவ்வாறு மொட்டந் தலைக்கும் முழங்காலுக்குமிடையே முடிச்சுப் போடுவார்கள் என்பதை விளக்குகிறது. தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் பேராசிரியர் இராஜேந்திரன் தி.மு.க கருணாநிதிக்கு நெருக்கமானவர். கருணாநிதி திராவிட கழக நெடுமாறனுக்கு நெருக்கமானவர். நெடுமாறன் புலிகளுக்கு நெருக்கமானவர். ஆக, மதுவுக்கும் புலிகளுக்கும் உறவு இருக்கிறதாம். எப்படி இருக்கிறது பொலிஸாருடைய கன்டுபிடிப்பு?
இவையெல்லாம் மதுவைக் காரணமின்றிக் கைது செய்த பொலிஸார் ஏதாவது காரணம் ஒன்றைச் சோடிக்க முயல்வதைக் காட்டுகிறது அல்லவா?
இது மதுவுக்கு மட்டும் நேரும் விடயமல்ல. இன்று கைது செய்யப்படுகிற பெரும்பாலான தமிழ் இளைஞர் யுவதிகளிள் நிலையும் இது தான்.
கைது செய்யப்படும் போது கைதுக்கான காரணத்தைத் தெரிவிக்கும் பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும், கைது செய்யப்படுபவர் காரணமின்றி தடுத்து வைக்கப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்டவரை அவருடைய நெருங்கிய உறவினரோ, சட்டத்தரணியோ பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுக் கொண்டே போகும் அப்பாவிகள் தண்டிக்கப்படலாகாது எனும் நோக்கிலான விடயங்கள் எவையும் இன்னமும் கடைப்பிடிக்கப்படுவதாகத் தொpயவில்லை. இலங்கையில் பணியாற்றும் மனித உரிமை நிறுவனங்களும் இது தொடர்பாக அவை விடுத்த அறிக்கைகளையும், மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
இலங்கையின் சிங்கள பௌத்த பேரினவாத அரசிடம் - அது எவ்வளவு தான் மனிதாபிமான முகமூடியை அணிந்து கொண்ட போதும் - நீதியை எதிர்பார்ப்பது மடமை அல்லவா என்று நீங்கள் சொல்வது புரிகிறது.
இதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி!