என்.சரவணன்
கடந்த 9ஆம் திகதி இரத்தினபுரியிலுள்ள தோட்டப்பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல் சம்பவங்களைப் பற்றி செய்தியிடவென அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டதுடன் அவர்கள் தமது கடமையை செய்வதற்கு இடையூறாகவும் இருந்துள்ளனர்.
செப்டம்பர் 24ஆம் திகதி கொழும்பிலிருந்து இரத்தினபுரி நோக்கி சரிநிகர் பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் இருவரும், இன்போர்ம் நிறுவனம் (INFORM), மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (Center for Policy Alternative), மனித உரிமைகள் செயலணி (Human Rights Action Committee), ஆகியவற்றின் பிரதிநிதிகளும் ஹிரு பத்திரிகையைச் சேர்ந்த ஒருவருமாக ஆறு பேர் சென்றிருந்தார்கள்.
வேவல்வத்தைப் பிரதேசத்தில் தகவல்களை சேகாpத்துக் கொண்டிருந்த போது தோட்ட உதவி சுப்பிரின்டன்ட் ஒரு கூட்டத்துடன் அங்கு வந்து, பத்திரிகையாளர்கள் எவரையும் அனுமதிக்க முடியாது என்றும், இராணுவத்தின் அனுமதியைப் பெற்று வரும்படியும் சத்தமிட்டார். இதைத் தொடர்ந்து, அருகிலிருந்த வேவல்வத்தை பொலிஸ் காவல் நிலையத்தில் அனுமதியைப் பெறுவதற்குச் அப்பத்திரிகையாளர்கள் சென்றிருந்த போது, பொலிஸார் புகைப்படம் எடுக்கவோ வீடியோ எடுக்கவோ கூடாது என்று உத்தரவிட்டுவிட்டு போக அனுமதித்தனர். (ஏற்கெனவே பலர் சென்று எடுத்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகிருந்தன என்பது கவனிக்கத்தக்கது.)
ஆனாலும், பொலிஸார் இவர்கள் போகுமிடமெல்லாம் பின்தொடர்ந்தனர். அவர்கள் தகவல்களை திரட்டிக் கொண்டிருந்த போதெல்லாம் பொலிஸாரும் கூட இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சொந்த அவலங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த இது பெரும் தடையாக இருந்தது. பத்திரிகையாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாகச் செய்யவும் இது பெரும் இடையூறாக இருந்தது.
பிற்பகல் 1.30 மணியளவில் ஒரு பொலிஸ்காரர் இவர்களிடம் வந்து ”சொல்லியும் கேளாமல் நீங்கள் புகைப்படங்கள் எடுத்திருக்கிறீர்கள் உடனேயே உங்களை ”மாத்தையா” வரச்சொன்னார்...” என அழைத்துச் சென்றனர். பத்திரிகையாளர்கள் பொலிஸ் நிலையத்தை அடைந்த போது, அவர்களுடன் உரையாடியவர்கள் மற்றும் அவர்களின் தகவல் திரட்டலுக்கு உதவி செய்தவர்கள் எனப் பலரும், பொலிஸ் நிலையத்திற்கு கைது செய்து கொண்டு வரப்பட்டிருந்தனர்.
அவர்களின் முன்னிலையில் அந்நிலையத்தின் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் பனாகொட எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், ”நீங்கள் புகைப்படம் எடுத்திருக்கிறீர்கள்” எனக் கூறி சத்தம் போட்டதுடன் அவர்களால் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் அடங்கிய ஒலிப்பதிவு நாடாக்களை பலவந்தமாக பறித்துப் போட்டுக் கேட்டார். அவர் அப்படிக் கேட்டுக் கொண்டிருக்கையில் அந்த ஒலிப்பதிவு நாடாவில் பத்திரிகையாளர்களுக்கு வாக்குமூலமளித்தவர்களில் சிலரும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
சில மணி நேரங்களாக அங்கு தடுத்துவைக்கப்பட்டதன் பின் அவர்களை போகுமாறு கூறி, ஒலிப்பதிவு நாடாக்களை திருப்பிக் கொடுத்தனர்.
-பத்திரிகையாளர்களின் பின்னால் பொலிஸாரை பின் தொடரவைத்ததன் மூலம் சுதந்திரமாக அவர்களை தரவுகள் சேகரிக்க விடாததுடன்,
-பாதிக்கப்பட்டவர்கள் நடந்ததை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும் தடையாக இருந்தனர்.
-இறுதியில் புகைப்படமெடுத்த குற்றச்சாட்டின் பேரில் பத்திரிகையாளர்களை தடுத்து விசாரித்தது மட்டுமன்றி
-அவர்களின் தனிப்பட்ட விபரங்களையும் பொலிஸில் பதிவு செய்து கொண்டனர்.
-அவர்களுக்கு தகவல் தந்தவர்களையும் பொலிசுக்கு கொண்டு வந்து விசாரித்ததுடன், நம்பிக்கையின் பேரில் அவர்களுக்கு மட்டுமேயென வழங்கப்பட்ட கருத்துக்களையும், தகவல்களையும் அடக்கிய பதிவு நாடாக்களை நிர்ப்பந்தமாக போட்டுக் கேட்டனர். இது பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமையில் தலையிடும் ஒரு விடயம் என்கின்ற அதேவேளை, தகவல் தந்தவர்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்தை இது விளைவிக்கவும் கூடும் என்று நினைக்காமலிருக்க முடியவில்லை.
இந்த ஒலிப்பதிவு நாடாவில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்களில்
1. சம்பவம் நடந்த 9ஆம் திகதியன்று 11 பொலிஸாரின் மேற்பார்வையின் கீழேயே நடந்தது என்றும்,
2. சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தமது காடைத்தனத்தை 5 மணித்தியாளங்களுக்குள், நடத்தி முடிப்பதற்கு பொலிஸாரால் ஆசீர்வாதம் வழங்கப்பட்டிருந்ததாகவும், 5 மணித்தியாளங்களுக்குப் பின்னர் ஏன் இன்னமும் போகவில்லையா என்று அவர்களை நோக்கி பொலிஸாரே கேட்டனரென்றும்,
3. பொலிஸாருக்கும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாகவும், தினமும் இரவில் அவர்களுடன் தான் குடியும் கும்மாளமுமாக இருப்பதாகவும்,
4. இது வரை பொலிஸார் சம்பவத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களில் எவரின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும்
கூறப்பட்ட தகவல்கள் அந்த ஒலிப்பதிவில் உள்ளடங்கும்.
அங்கு சென்ற பத்திhpகையாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் திரட்டிய தகவல்கள் இவ்வன்முறைச் சம்பவத்தில் பொலிசுக்கும் பங்கு இருக்கின்றது என்பது வெளிப்படையாக தெரிவித்துவிடும் என்பதாலேயே அவர்கள் எம்மை இவ்வாறு தடுத்து வைத்தார்கள் என்று கூறுகிறார் அங்கு சென்ற பத்திரிகையாளர் ஒருவர்.