Friday, January 30, 2009

எழுதுவதற்கும் இனித் தடை!



என்.சரவணன்


கடந்த ஜனவரி 28ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது எம்மெல்லோருக்கும் தெரிந்ததே. அவசரகால சட்டப் பிரமாண­ங்களின்படி பிரகடனப்படுத்­தப் பட்டுள்ள இந்த மோசகரமான விதி­கள் குறித்து இத்தனை வாரங்­க­ளாக எவரும் அவ்வளவு பிரச்சி­னைக்குரிய ஒன்றாகக் கருதியிருக்­கவில்லை. ஏதோ புலிகளுக்கு எதி­ரான ஒன்றாகவே கருதிவந்த வேளை இந்த விதிகள் மக்களின் கருத்த­றியும் சுதந்திரத்­திற்கு எதிரான­தென்பதையும், அரசியல் பழிவாங்க­லுக்கு வகைசெய்யும் சட்டமாக­வும், பத்திரிகை­களின் சுதந்திர வெளியீ­ட்டுக்கு அச்சுறுத்­தலானதென்ப­தையும் அண்மையில் தான் திடீரென கண்டிருக்கின்­றனர். எனவே இப்போது தான் பலர் துயிலி­லிருந்து மீண்டு இவ்விதிகளு­க்கெதிராகப் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தி­ருக்கின்றனர்.

இந்தச் சட்ட விதிகளின் அபாய­த்தை முதலில் சகல பத்திரிகையா­சிரியர்களது கவனத்துக்கும் கொண்டு வந்தவர் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் சிங்க ரணதுங்க தான். அவசர கடிதமொ­ன்றின் மூலம் பத்திரிகையாசிரியர்க­ளுக்கு இந்த விடயத்தை அறிவித்த அவர் உடனடியாக இதற்கெதிரான நடவடிக்­கைகளில் இறங்கியாக வேண்டுமென அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

புதிய விதிகளின் படி

(அ) ”தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தின் அல்லது இயக்கம் சார்ந்தவர்களால் பிரசுரிக்கப்படும் எழுத்துக்களை அல்லது பிரசுரங்களை விநியோகிப்­பது அச்சடிப்பது பிரசுரிப்பது,

(ஆ) இந்த இயக்கத்தின் நோக்­கங்­களை முன்னெடுத்துச் செல்லு­முகமாக தகவல்களைப் பரிமாறு­வது பரிமாற முற்படுவது, அல்லது இயக்கத்தின் தீர்மானங்களை அல்லது கட்டளைகளை தகவல் பரிமாற்றம் செய்வது” என்பன தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

இக்குற்றத்துக்கு இலக்கானவர்­கள் ஏழு வருடங்களுக்குக் குறை­யாத 15 வருடங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

சாராம்சத்தில் சொல்லப் போனால் இனி புலிகளின் செய்தி­களை, பேட்டிகளை, புகைப்படங்­களைப் பிரசுரிக்க பத்திரிகை­கள் முனைந்தால் அந்தோ கதி தான்.
இந்த விதிகளைப் கண்டித்து ”சுதந்தி­ரப் ஊடக இயக்கத்தினர்” (FMM-Free Media Movement) அறிக்கை வெளியி­டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்­டாலும் கூட இது வரை அப்படி எந்த வித அறிக்கை­யும் வெளியிடப்படவி­ல்லை. சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என சட்ட வல்லுனர்களு­டன் கலந்தா­லோசித்து வருவதாக அதன் செயலாளர் சீதா ரஞ்சனி சரிநிகரு­க்கு தெரிவித்தார். சீதா ரஞ்சனி கடமையாற்றி வரும் ”யுக்திய” (சரிநிகரின் சகோதர பத்திரிகை) பத்திரிகை இறுதியாக வெளிவந்த தமது இதழில் முன்பக்க­த்தில் இச்செய்தியை வெளியிட்டு கூடவே புதிய சட்ட விதிகளுக்கு சவால் விடும் வகையில் வகையில் புலிகளை ஆதாரம் காட்டி ஒரு செய்தியையும் பிரசுரித்துள்ளது.

முல்லைத்தீவில் புலிகளால் கைப்பற்ற­ப்பட்ட பகுதிகளில் பொது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்­பதாகவும் அங்கு புலிகளின் சிவில் நிர்வாகம் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டிருப்பதாகவும் குறிப்பிட்­டுள்ள அந்தச் செய்தி புலிகளின் மார்ச் 17ஆம் திகதியன்று வெளியிட்ட அறிக்கை­யை ஆதாரம் காட்டியிரு­க்கிறது யுக்திய.

இந்தப் புதிய விதிகளால் பத்தி­ரிகைகள் மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்தும் உரிமையை இழந்துள்­ளன. யாருடைய பணத்தினை வரியாக வசூலித்து இந்த யுத்தம் நடத்தப்படுகி­றதோ எவர்கள் இந்த யுத்தத்தினால் நாளுக்கு நாள் கொல்லப்பட்டுக்க கொண்­டிருக்கிறார்களோ, அந்த மக்களுக்கு இந்த யுத்தத்தின் உண்மைகளை தெரிவிக்க முடியா­மல் போகிறது. மக்களைப் பொறுத்­தளவில் யுத்தத்தின் பங்குதாரர்க­ளாகவே உள்ளனர்.

இனி யுத்தம் பற்றி நடுநிலைமை­யான செய்திகளை வழங்க பத்திரிகைகளுக்கு இருந்த சந்தர்ப்பம் கூட பறி போய்விட்டது.

இத்தனை காலம் யுத்தம் குறித்த செய்திகளையும் வடக்கு நிலவரங்களை­யும் குறித்து அரசா­ங்கம் என்ன அறிவித்தல் வழங்கிய போதும் புலிகளின் பக்க நியாயங்­களையும் அறிக்கைகளையும் ஒரு முறை பார்த்தால் கிட்டத்தட்ட நிலைமை­யை ஓரளவு ஊகிக்கலாம் என்று கருதி வந்த ஊடகங்களுக்கு இனி அரசாங்கம் சொல்வது மட்டும் தான் தகவல்.

ஆய்வாளர்களுக்கு கூட இனி புலிக­ளின் தகவல்களை மேற்கோள் காட்டி எந்த விடயமும் எழுத முடியாது என்பது ஒழுங்­கான ஆய்வு­களுக்கு கூட இருந்த வாய்ப்பு­கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று கூடக் கூறலாம்.

கள நிலவரம் கூட அரசாங்கம் கூட்டிச் சென்று காட்டும் இடங்களை­யும், அங்கு அரசாங்கம் சொல்லும் தகவல்களையும், கருத்துக்களை­யும் மட்டும் தான் தொடர்பூடகங்கள் பயன்படுத்த முடியும். ஆனால் புலிக­ளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களு­க்குப் போய் அவர்களின் பேட்டி­கள், புகைப் படங்கள், செய்திகள் என்பன­வற்றைப் பிரசுரிக்க முடியாது. இந்த சுதந்தரமாக கருத்தறியும் அடிப்ப­டைச் சுதந்திரம் பறிக்கப்பட்டி­ருக்கும் இந்தச் சட்ட விதிகளின் அபாயகரமான விளைவுகளை இன்னும் பலர் உணராதுள்ளதன் காரணம் தான் விளங்கவில்லை.

இதில் உள்ள பெரும் வேடிக்கை என்னவென்றால், ஜனவரி 28ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வந்த இவ்விதியின் பின்னர் வாராந்தம் பாதுகாப்பு படையின­ரால் நடத்தப்­பட்டு வந்த பத்திரிகையாளர் மாநாட்டின் போது அவர்களாலேயே மீளப்பட்டுள்ளது தான்.

ஒவ்வொரு வாரமும் பிரிகேடியர் சரத் முனசிங்க பத்திhpகையாளர் மாநாட்டின் போது ”புலிக­ளின் வானொலியை இடை மறித்து கேட்ட போது அவர்களின் வானொ­லியில் இன்னது கூறப்பட்டது”எனக் கூறி வந்துள்ளார். இந்த விதிகளை முதலில் மீறியிருப்பதே இதனை நடைமுறைக்குக் கொண்டு வந்த அரசாங்கமும், பாதுகாப்பு துறையி­னருமே என்றால் இதை விட வேடிக்­கையும், சட்ட துஷ்பிரயோக­மும் வேறென்ன?

இந்தச் சட்ட விதிகள் இப்படி­யான துஷ்­பிரயோகங்க­ளுக்கு நிச்ச­யம் இடமளித்து­ள்ளது. இது மட்டும­ன்றி இந்தச் சட்டத்தைப் போட்டவ­ர்களே மீறலாம் என்பது எவ்வளவு பெரிய ஜனநாயக விரோ­தச் செயல்? எனவே ஒட்டுமொத்த அடக்குமுறை­க்கும் பழிவாங்­கலு­க்கும் பயன்படப் போகும் இந்தச் சட்டம் அரச பயங்க­ரவாதத்தை தடையின்றி செய்யப் பிறப்பித்துள்ள சட்ட அங்கீகார­மென்றெ கூற வேண்டும்.

மேலும் நடைமுறையில் இருக்­கும் அரசாங்கக் கட்டுப்பாட்டு தொட­ர்பு சாதன­ங்களைப் போலவே ஏனைய தொடர்பு சாதனங்களும் இனிமேல் அரசாங்கம் தரும் செய்தி­களை மட்டும் தரப்போகின்ற அபாயம் வந்துள்ளது. அது தான் அரசின் தேவையும் கூட. சகல தொடர்பு ஊடகங்­களையும் அரசின் பிரச்சார ஊடகமாக மட்டும் இருக்கச் செய்வதே அதன் தேவை. இந்த தேவையை அடைவதற்கு அரசு கையாண்டுள்ள இந்தப் ”பயங்கர­வாத” நடவடிக்கையை எதிர்த்து சில பத்திரிகை­கள் முடிந்தால் கைது செய்யட்டும் அதன் பின் பார்ப்போம். சட்டத்தை முகம் கொண்டு அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை அம்பலப்படுத்து­வோம் எனச் சில நடவடிக்­கைகளை ஆரம்பித்திருக்கின்ற போதும் இது எவ்வளவு தூரம் சாத்தியமாகப் போகிறது? தொடர்ந்து தாக்குப் பிடிக்குமா? என்பதே கேள்வியாக இருக்கிறது.