Friday, January 30, 2009

ஊடகத்தால் எவ்வாறு வழி நடத்தப்படுகிறோம்?


என்.சரவணன்


அடுத்த நூற்றாண்டின் மிகப்பெரும் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகம் (Media) இருக்கப்போகிறது. ஊடகத்தின் நேர்ப்படியான (positive) பாத்திரத்தைப் போலவே எதிர்மறை (negative) பாத்திரமும் உண்டு.

ஊடகம் இன்று நம்மையெல்லாம் வழிநடத்து­கிறது. நம்மை வழிநடத்துகிறது என்று கூறப்படுவ­தன் அர்த்தம் இன்றைய எமது சிந்தனைகளை தீர்மானிப்பதாக அது ஆகிவிட்டிருக்கிறது.

இன்றைய பெரும்போக்கு (mainstream) எது என்று தீர்மானிக்கும் சக்தியாக அது ஆகிவிட்­டிருக்கிறது. பிற்போக்கு ஆதிக்க சித்தாந்தங்களை பெருங்கதையாடல்களாக ஆக்கி அவற்றை நிலை­நிறுத்தும் கருவியாக இது ஆகிவிட்டிருக்கிறது.

ஊடகத்தை யார் கொண்டிருக்கிறாரோ அவரிடம்’அச்சக்தியிடம் மனித நடத்தையை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறதென்று அர்த்தம் என்பர் சிலர். இது உண்மையில் உண்மை. ஊடகத்தை கொண்டிருப்பவர் அல்லது கொண்டிருக்கும் சக்தியிடம் சிந்தனையை மட்டுப்படுத்தும், கட்டுப்படுத்தும், வழிநடத்தும் சக்தி உண்டு.

இவ்வாதத்துக்கு மறுப்பு கூறும் சாரார் இதனை, இன்னும் ஊடகம் சென்றடையாத பின்தங்கிய நாடுகளில்’பின்தங்கிய கிராமங்கள் அதிகமுள்ள உலக சமுதாயத்தில் இக்கருத்து எப்படி சரியாகும் என வினவுவர். ஆனால் பின்தங்கச் செய்யப்பட்ட சமுதாயங்களில் நிச்சயம் ஊடகம் நேரடியாக சென்றடைய வேண்டுமென்பதில்லை. அந்த சமுதாயங்களை அதிகாரம் செலுத்துகின்ற சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டம்சங்கள் இந்த ஊடகங்களால் ஏலவே வழிநடத்தப்பட்டிருக்கும். ஆக, இன்று இந்த ஊடகம் வழிநடத்தாத எந்த சமூகமும் உலகில் இல்லை.

ஊடகம் இன்று சகலவற்றையும் தீர்மானிக்­கின்ற முக்கிய கருவியாக ஆகிவிட்டிருக்கிறது. இன்றைய ஊடகங்களை தன்னகத்தே கொண்டி­ருக்கும் அதிகாரத்துவ சக்திகள், தமது அதிகா­ரத்தை நிலைநாட்ட இந்த ஊடகங்களை மிகவும் தந்திரமாகவும் நுட்பமாகவும் கையாண்டு வருகி­ன்றன. ஏற்கெனவே புரையோடிப் போயிருக்கின்ற அதிகாரத்துவ சிந்தனைகளை, ஆதிக்க சிந்த­னைகளை, உறுதியாக பலப்படுத்துவதில் இவை இந்த கைதேர்ந்த ஊடகங்களை கையாள்கின்றன.

ஆதிக்க பிற்போக்கு சிந்தனைகளையும், மரபார்ந்த அதிகார ஐதீகங்களையும் மீளுறுதி செய்கின்ற சித்தாந்த மேலாதிக்கத்தை இந்த ஊடகங்களைக் கொண்டே இன்று உலகம் முழுவ­துமான அதிகார சக்திகள் செய்து வருகின்றன.

எனவே தான் உலகின் பல்வேறு புரட்சிகர சக்திகள் இன்று ஊடகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முனைப்பு காட்டுகின்றனர். அதுமட்டு­மன்றி இன்றைய புரட்சிகர சமூக மாற்றத்துக்காக போராடும் சக்திகள் எதிரி கொண்டிருக்கும் இந்த ஊடக ஆற்றலை எதிர்த்து நிற்கக்கூடிய வகையில் ஊடக வளங்களை’ஆற்றலை தாமும் கைப்பற்ற முனைகின்றன. இது இன்றைய அதிகாரத்துக்காகப் போராடும் சகல சக்திகளுக்குமான முன்நிபந்த­னையாக - சித்தாந்த மேலாதிக்கத்தை நிலைநாட்­டுகின்ற ஊடகங்கள்- ஆகிவிட்டிருக்கின்றன.

இந்த ஆதிக்க சித்தாந்தங்களை நிலைநாட்­டுவதிலும் மூளைச்சலவை செய்து அடிமைத்துவ சமூக அமைப்பை ஏற்படுத்தவும், அடிபணிய வைக்கும் முயற்சியிலும் இந்த ஊடகங்களை மிகவும் நுட்பமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

நோம் சொம்ஸ்கி இதனை தொடர்பூடக பயங்கரவாதம் (Media Terrorism) என்கிறார். இந்தப் போக்கை ஆராய்கின்ற இன்னும் சில சமூகவியலாளர்கள் இதனை தொடர்பூடக மாபியா (Media Mafia) என்றும் ஊடக வன்முறை (Media Violation) என்றும் குறிப்பிடுகின்றனர். ஒட்டுமொத்­தத்தில் இந்த ஊடகங்கள் இன்று ”அதிகாரத்­துவத்தின் கருவிகளாக” (Media as a Weapon of Power) பயன்படுத்தப்படுகின்றன.

ஊடகங்களின் பன்முகத்தாக்கம் பற்றிய கரிசனையானது தகவல்தொழில்நுட்ப வியாபகத்­தோடு அதிகரித்ததெனலாம். இந்நிலையில் தான் ஊடகவியல் பற்றிய சமூகவியல் ஆய்வுகள் இன்று அதிகரித்துள்ளன. சிவில் சமூகத்தில் அது ஆற்றும் பாத்திரம், உற்பத்தி உறவுகள்- குறிப்பாக மூலதனம் இதில் செலுத்தி வருகின்ற நிர்ப்பந்தங்கள், மூலதனத் திரட்சி ஊடகத்தில் காலூன்ற எடுத்துவரும் முயற்சி, திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பன்னாட்டு நிறுவனங்கள் தரகு முதலாளிகளுக்கூடாக ஊடகத்தைக் கைப்பற்றுவதில் எடுத்துவரும் முயற்சிகள், நவீன அரசுகள் தனது அடக்குமுறை இயந்திரங்களில் ஒன்றாக இதனை பயன்படுத்த தலைப்படுகின்ற போக்கு, அவ்வாறு அடக்குகின்ற மற்றும் அடக்கப்படுகின்ற சக்திகளின் எதிர்காலம் என பல கோணங்களில் இவை குறித்து அலச வேண்டியுள்ளது.

பெரும்பாலும் ஊடகத்தின் உட்கட்டமைப்பு (infra structure) பற்றியே பெருமளவான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கிற நிலையில் அதன் புறச் சக்திகளின் தலையீடு, தாக்கம் எதிர்காலம் குறித்து தற்போதைய ஆய்வுகளில் கூடிய கரிசனை கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே எமது சமூக அமைப்பில் நிலவுகின்ற ஆதிக்க சித்தாந்தங்களை மீளுறுதி செய்து, அதனை மீள கட்டமைக்கின்ற பணியினை ஆற்றுவது ஆதிக்க சக்திகள் தமது அதிகாரத்தை நிலைநாட்ட முன்நிபந்தனையானது. எனவே அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு, அடிமைத்துவத்தை நிலைநாட்டி அதற்கு அடிபணிய வைக்கவோ அல்லது அவற்றுடன் சமரசம் செய்து கொண்டு வாழவோ பழக்க ஏற்கெனவே எமது சமூக அமைப்பில் மதம், கல்வி, பண்பாட்டு கலாசார ஐதீகங்கள், சட்டம் என நிறுவப்பட்டுள்ளன. இவ்வத்தனையையும் ஒருங்கு சேர செய்து முடிக்க இலகுவான வழியாக இன்றைய ஊடகம் ஆற்றல் மிகுந்ததாக உள்ளது. எனவே தான் அதிக்கக் கருவிகள் இதில் அக்கறை செலுத்துவது இன்றிமையாததாக ஆகிவிட்டிருக்கிறது.

அடக்கப்படும் மக்கள் பிரிவினர் முகம் கொடுக்கும் இன்னல்கள் வெகு சாமர்த்தியமாக மூடி மறைக்கும் ஆற்றல் இந்த ஊடகத்துக்கு உண்டு. அதுபோல இல்லாத ஒன்றையும் இருப்பதாக காட்டவோ அல்லது அதனை ஊதிப்பெருப்பிக்கும் ஆற்றலும் இந்த ஊடகத்துக்கு உண்டு. இவ்வாறு மறைப்பதும், ஊதிப்பெருப்பிப்­பதும் ஊடகத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் சக்திகளின் நலன்களிலேயே தங்கியிருக்கின்றன.

கிளின்ரன் மோனிக்கா லிவின்ஸ்கி விவகாரம் பற்றி திரும்பத்திரும்ப பேசும் ஊடகம் உள்நாட்டில் நடந்த கோணேஸ்வரி குறித்தும், கிருஷாந்தி குறித்தும் அதை விட குறைந்த முக்கியத்துவத்­தையே தரும். சிங்கள ஊடகங்கள் அதை விட குறைந்த முக்கியத்துவத்தை தரும் அல்லது ஒன்றும் தராது. கிளின்ரனின் நாய்க்கு சுகமில்லாதது சர்வதேச அளவில் செய்தியாகும் அதே வேளை வன்னிப் பட்டினிச் சாவு உள்ளாட்டிலும் தெரியாமல் செய்யப்படும்.

அமெரிக்காவில் ரொனால்ட் ரேகனும், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா..., இலங்கையில் காமினி பொன்சேக்கா போன்ற வெறும் திரையுலக நட்சத்திரங்கள் அரசியல் பிரமுகர்களாக ஆக்கப்பட்டதும் இந்த சினிமா எனும் ஊடகத்தையும், ஏனைய ஊடகங்களும் ஊதிப்பெருப்பித்து ஏற்படுத்திய மாயை என்பதை நாமெல்லோரும் விளங்கிக் கொள்வோம்.

எப்போதும் எந்த சக்தியும் அல்லது தனிநபரும் தான் கொண்டிருக்கும் அக-புற, ஆற்றல் ’வளங்கள் தக்கவைக்கப்படுவதற்காக’அதிகரிக்கப்படுவதற்காக அவை அதிகாரமாக உருவெடுக்க வைக்கின்றன. வர்க்கம், பால்வாதம், இனவாதம், வயதுத்துவம், பதவி, சாதியம், நிறவாதம் என பல்வேறு வடிவங்களிலும் நிலவுகின்ற ஆதிக்க உறவுகள், அதிகாரத்துவமாக தொடர்ந்தும் நிலைபெற அவை நியாயம் கற்பிக்கப்படவேண்டும். ”மதத்­தின்” பெயரால், ”தூய்மை”யின் பெயரால் இந்த கற்பிதங்கள் குறித்து மூலைச்சலவை மிகுந்த சித்தாந்த மோதிக்கத்தை நிலைநாட்டியே ஆகவேண்டும்.

இப்படி கருத்தேற்றம் செய்யப்பட்ட கற்பிதங்களை நிலைநாட்டுவதில் ஊடகம் முக்கிய பங்காற்றி வருகின்றன.

இந்த வகையில் ஊடகம் பற்றிய நமது பார்வை எளிமைப்படுத்தப்பட்டே இருக்கின்றன. குறைத்து மதிப்பிடப்படுகின்றன. ஊடகம் நம்மை ஒன்றும் செய்து விடமுடியாது என்கின்ற மாயையில் இருத்தப்பட்டுள்ளோம். எனவே தான் ஊடகத்தின் வடிவம், பண்பு, அதன் திசைவழி என்பன குறித்து அவ்வளவாக எம்மத்தியில் அக்கறைக் கிடையாது. தொலைக்காட்­சியில் 30 வினாடிகள் கொண்ட ஒரு விளம்பரத்­துக்கு சராசரியாக அறுபதினாயிரம் ரூபா வரை அறவிடப்பட்டு வருகிறது என்பதைத் தெரிந்தால் அசந்து போவார்கள்.ஒரு தடவைக்கு இவ்வளவு அறவிடப்படுகிறதென்றால் எத்தனை முறை குறிப்­பிட்ட விளம்பரம் வருகின்றது? அப்படி­யெனில் எவ்வளவு தொகை கொடுக்கப்பட வேண்டும்? நம்மீது அது எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லையென்றால் ஒரு நிறுவனம் ஏன் இவ்வளவு தொகையை அவ்விள­ம்பரத்துக்கென ஒதுக்குகிறது? அவ்வாறெனில் விளம்பரம் எவ்வாறு எம்மில் பிரதிபலிக்கின்றது?

தகவல் களஞ்சியங்களை வைத்திருக்கும் சக்திகளால் உலகு ஆளப்படப் போகிறது எனும் கருத்தாக்கம் வலுவாகி வருகின்றது. இது பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்­பட்டு வருவதை இன்டர்நெட் செய்திகள் கட்டுரைகளிலிருந்து அறிய முடிகிறது.

எது பற்றிய முடிவுகளுக்கு வருவதற்கும் அடிப்படையில் தரவுகளை-தகவல்களை நம்பி­யிருக்க வேண்டிய தேவை நிலவுகின்ற நிலையில் போட்டி போட்டுக்கொண்டு தகவல்களை முன்கூட்டியே அறிய ’பெற முயற்சிகள் நடக்கி­ன்றன. அது போலவே தகவல்களை களஞ்சியப்­படுத்துவதற்கும் அவற்றைத் தருவதற்காகவும் ’சந்தைப்படுத்துவதற்காவும் போட்டிகள் நிலவப்­போகின்றன. இந்நிலையில் தகவல் தொழில்­நுட்பத்தின் மீது மூலதன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. 'நட்சத்திர யுத்தம்”, ”வான்­வெளி யுத்தம்” என்கிற கருத்தாக்கங்கள் மங்கி இனி வரப்போகும் காலம் தகவல் யுத்தத்துக்கான (IT War ) காலம் என்கிற கருத்தாக்கம் வலுவாகி வருகின்றன.
வெறும் தரவுகள்’தகவல்களை சித்தாந்த சுமையேற்றி பரப்புகின்ற வேலையை ஏற்கெனவே உலகில் முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. அமொpக்கா இதற்காக தமது உயர்ந்தபட்ச தொழில்நுட்­பத்தையும், வளங்களையும் பயன்படுத்தி வருவது இரகசியமானதல்ல.

தரவுகள், தகவல்கள் பரப்பப்படுவதற்கு’ அனுப்பப்படுவதற்கு’விற்பனைசெய்யப்படுவதற்கு முன்னரே அதன் நுகர்வோர் யார் என்று இந்த தகவல் முதலாளிகளால் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. அதற்கேற்றபடி அதன் வடிவம், வரிசை, உள்ளடக்கம், பண்பு என்பன கட்டமைக்­கப்பட்டுவிடுகின்றன.

இத்தகவல்களை வழங்குகின்ற சாதனமாக, சகலவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இது தோன்றி, வளர்ந்து, ஊடுருவி, வியாபித்திருக்­கின்றது. இன்னும் சொல்லப் போனால் எதிர்வரும் மில்லேனியத்தின் (ஆயிரம் ஆண்டுகளைக் குறிக்கின்ற Millennium) முதல் நூற்றாண்டை தகவல் புரட்சி நூற்றாண்டு என்கின்றனர். தகவலைக் கொண்டிருக்கிற சக்திகளே அதிகார சக்திகளாக ஆகக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் எனும் கருத்தாக்கம் இன்று நம்பக்கூடியதாக உள்ளது. ஆதிக்க சக்திகள் தமது அதிகாரத்துவத்தை தக்கவைக்க, அதனை விரிவுபடுத்த மிகக் கனமாக தகவல்களை உற்பத்தி செய்து உற்பத்தி செய்யப்பட்ட அத்தகவலை அரசியல்மயப்படுத்தி’ கருத்தேற்றம் செய்து அல்லது புனைந்து’திரிபுபடுத்தி’பெருப்பித்து சிறுப்பித்து சந்தைக்கு விடுகின்றன.

இதற்காக இரண்டு வகை பிரதான தந்திரோ­பாயங்களை அது அணுகும். முதலாவது, சந்தையில் ஏற்கெனவே கேள்வி அதிகம் (ஏற்கெனவே புரையோடிப்போயுள்ள ஆதிக்கக் கருத்துக்கள்) எதற்கு என பார்த்து அந்த இடைவெளியை நிரப்புவது. இரண்டாவது, தான் சந்தைப்படுத்த விரும்புகின்ற புதிய செய்திகளை’ கருத்தாக்கங்களை சந்தைக்கு விட்டு சமூகத்தை அதற்கு பழக்கப்படுத்துவது, போதைகொள்ளச் செய்வது.

இதனை நாம் உன்னிப்பாக அலச வேண்டியி­ருக்கிறது. அடுத்த நூற்றாண்டின் மிகப்பெரும் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகம் இருக்கப்போகிற நிலையில் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பது அவசியத்திலும் அவசியம்.

மொத்தத்தில் உலகில் ஆளும் வர்க்கங்கங்கள்’ சக்திகள் தமது நவகாலனித்துவத்தை அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்துச் செல்வது இந்த தகவல் தொழில்நுட்பத்தை நம்பியே என்பதை கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய உலகமயமாதல் போக்குக்கூடாக மலினத்துவத்தை வேகமாக மக்கள் மயப்படுத்துவதற்கும் இந்த தகவல் தொழில்நுட்பத்தை’ஊடகத்தைத் தான் நம்பியிருக்கிறது.

ஆக ஒட்டுமொத்தத்தில் நவ பாசிசம் என்பதன் புதிய வடிவம் தகவல் தொழில்நுட்பத்துக்­கூடாகவே மேற்கொள்ளப்படப் போகிறது. அதுபோல அதனை முறியடிக்க முனையும் எந்த சக்தியும் இந்த இதே ஊடகத்தை கருத்திற் கொள்ளாமல் துரும்பு கூட முன்னேற முடியாது என்பது குறித்து மீள மீள எச்சரிக்கை கொள்ள வேண்டியுள்ளது.